267. ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே.
 

     (இ - ள்.) ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனை - அரசியல் நன்கு அமையாவழி
இவ்வொரு பிறப்பிற்றானே பெரிதும் துன்பம் எய்து தற்குரியவனாகிய ஒருமனிதனை,
உம்மையாலே - கழிந்த பிறப்பிலியற்றிய வினையாலே, திருமையால் முயங்கும் -
நன்மையோடே பொருந்துதற்குக் காரணமான, செல்வச் செருக்கொடு - செல்வங்களின்
நுகர்ச்சியாலே தோன்றாநின்ற களிப்புடனே, திளைப்ப - பொருந்தி மகிழும்படி,
நோக்கி - தன் அருட்கண்ணாலே பார்த்து, ஒருமையாலே - இவ்வொரு பிறப்பின்
மாத்திரையானே, இருமையும் இயற்றலின் - இம்மை மறுமைகளிரண்டி டத்தும் நுகர்தற்குரிய
இன்பங்களை நுகரும்படி செய்தலால், இறைவன் போல - அவனுக்குத் தன்
மன்னனைப்போன்ற, பெருமையை உடைய தெய்வம் - தொழுதற்குரிய சிறப்புடைய கடவுள்,
பிறிது - வேறொன்று. இனி இல்லை - ஆராய்ந்து காணுமிடத்தும் இல்லையாகும் (எ - று.)
அன்று : ஏ, அசைகள்.

அரசியல் நன்றாக அமையாத பொழுது மனிதன் இப்பிறப்பிலேயே துன்புற நேர்தலின்
“ஒருமையாலே துன்பம் எய்தும் ஒருவன்“ என்றார். செல்வநுகர்ச்சி ஆகூழாற் றோன்றுவ
வாகலின் “உம்மையாலே திருமையான் முயங்கும் செல்வச்செருக்கு“ என்றார். செருக்கு -
ஈண்டுச் செல்வ நுகர்ச்சியாலாய களிப்பு. ஆகூழ்போன்று அரசன் தன் குடிகட்கு இன்ப
நல்க வல்லன் என்றபடி. நோக்கம் - ஈண்டு அவருடைமை மேற்று. “நீ உவந்து நோக்கிய
வழி பொன்பூப்ப“ என்றார் பிறரும். இருமையும் ஒருமையாலே இயற்றலாவது, இம்மையின்
நன்னெறியில் நிறுத்தி, பயம் தீர்த்து இன்புறச் செய்தலும், மறுமையில் துறக்கம்
புகுவித்தலுமாகிய இரண்டும் ஒவ்வொரு பிறப்பானே பொருந்த அரசியற்றல், தெய்வம்
கட்புலனாகாமையின் கண்ணெதிர் தோன்றும் அரசன், அத்தெய்வத்தின் மிக்க
பெருமையுடையவன் என்க.

( 28 )