உலகத்திற்குக் கண்கள் மூன்று

268. கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் 1பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை 2மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே! கண்எனப்படுவ மூன்று - உலகத் திற்குக் கண்கள்
என்று சொல்லப்பெறுவன மூன்றாம் அவையாவன:- காவலன் - உயிர்களைப் பாதுகாத்தற்
றொழில் வல்லவனான அரசன், கல்வி - கல்வியறிவுடைமை, காமர் விண்ணினைச் சுழல
ஒடும் வெய்யவன் - அழகிய விசும்பின் கண் சுழன்று ஓடுகிற கதிரோன், என்னும் பேரார்
எண்ணினுள் - என்று சொல்லப்பெறுகிற பெருமைபொருந்திய இம்மூன்று மாம், மூன்றுள் -
இவற்றுள், தலைக்கண் வைத்தகண் அஃது இல்லையாயின் - முதலாவதாக நிறுத்தப்பட்ட
நல்லரசாகிய கண் இல்லையானால், மண்ணினுக்கு - இவ்வுலகத்திற்கு, இருளை நீக்கும்
வகை பிறிது இல்லை - துன்பவிருளைப் போக்கும் வழி வேறொன்றும் இல்லை (எ - று.)

காவலன் துன்ப விருளையும், கல்வி அறியாமையாகிய அகவிருளையும், வெய்யவன்
புறவிருளையும் போக்கி காட்டற்குரிய கண்களாம், எவ்வாற்றானும் துன்ப விருள்
தொலைதலே உயிர்கட்குச் சிறப்பாகலின் அவ்விருளை அகற்றும் அரசாகிய கண்
தலைக்கண் வைக்கப் பட்டது என்க.

( 29 )