(இ - ள்.) முடிமிசைத்திவள - தாங்கள் அணிந்துள்ள முடிக்கலன்கள் தம்மேற்றோயும்படி, வேந்தர் முறை முறை பணிய - அரசர்கள் வரன்முறை யாகத்தாழ, விம்மி அடிமிசை நரலும் - விம்முதலையடைந்து அடிகளின் மேலே ஒலித்தலைச் செய்யும், செம்பொன் அதிர்கழல் அரசர் ஏறே - செம் பொன்னாலாகிய முழங்குகின்ற வீரக்கழல்களை யணிந்த அரசர்கோவே! குடிமிசை வெய்யகோலும் - நாட்டுமக்களிடத்திலே மன்னர்கள் செலுத்துங் கொடுங்கோன்மையும், கூற்றமும் - உயிர்களைக் கவரும் கூற்றமும், பிணியும் - நோயும், நீர்சூழ் படிமிசை இல்லையாயின் - கடலாற்சூழப்பெற்ற உலகத்தின்கண் இல்லாதொழியின், வானுள் யார் பயிறும் என்பார் - தேவரு லகத்திற்கு எவர் செல்வோமென்று கருதுவார்கள். (எ - று.) வெய்யகோல் - கொடுங்கோன்மை; கொடுங்கோன் மன்னர் வாழுநாட்டில் கூற்றமும் பிணியும் நடமாடும் என்பார் அவற்றையும் கோலோடு சேர்த்து எண்ணினர். இங்ஙனம் கூறவே செங்கோன் மன்னர் வாழுநாட்டில் கூற்றும் புகுதற்கு அஞ்சும். ஆண்டுப் பிணி பசி முதலியன இல்லையாம். ஆகவே அந்நாடு பொன்னாட்டினும் இன்பஞ் சிறந்த நாடாகும். ஆகவே அதன்கண் வாழ்வார் வானவர் நாட்டையும் விரும்பார் என இச்செய்யுளும் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பித்தமை உணர்க. கழல் வேந்தர்முடி தம்மிசைத்திவள ஆர்க்கும் கழல் எனக் கொள்க. பயிறும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. |