மருதம்

27. அள்ளி லைக்குவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே
     (இ - ள்.) அள்இலைக் குவளைத்தடம் மேய்ந்து-செறிந்த இலைகளை யுடைய
நீலமலர்களையுடைய நீர்நிலையில் அவற்றை மேய்ந்து; அசைஇ-அசையிடுதலால்;
கள்அலைத்த கவுள் கருமேதி-குவளைப்பூவின் தேன்வழியா நின்ற கடைவாயையுடைய கரிய
எருமையின்; உள் அலைத்து-உள்ளத்தே அதன் கன்றின் நினைவு தோன்றி அலைத்தலால்;
பால்ஒழுக-அதன் பாலானது நீரிலே ஒழுகவே; புள்-அன்னப்பறவைகள்; குடைந்து
உண்டலால்-நீரில் முழுகி அப்பாலைத் தேர்ந்து உண்பதனால்; புலங்கள்-நீர் நிரம்பிய
வயல்கள்; அலைத்த புனல்-அவ்வன்னங்களால் உழக்கப்பட்ட நீரையுடையவாயின. (எ - று.)

     இது மருதநிலத்தன்மை. எருமை மருதநிலத்து விலங்கு. எருமைகள் குவளையை
மேய்ந்து அசையிடும்போது அக்குவளையிலுள்ள தேன் அவ்வெருமைகளின் வாயின்
இருபுறத்தும் ஒழுகினவென்பார், 'குவளை மேய்ந்து அசைஇக் கள்ளலைத்த கவுட்கருமேதி'
என்றார். அசைஇ, சொல்லிசை யளபெடை. எருமைகள் தாமாகவே பால்சுரக்குமோ எனின்
செழிப்பு மிகுதியால் சுரக்கும் என்க. இனி எருமைகள் கலக்கி நீர் விளையாடுகின்ற
அதிர்ச்சியால் நீர்ப்பறவைகள் அஞ்சியெழுந்து நீரை யலைத்தன எனினுமாம். இதற்கு
உண்டற்றொழிலை எருமைக்கேற்றுக.

( 27 )