(இ - ள்.) கண்சுடர் கனலச் சீறும் - கண்களினின்றும் தீப்பொறியானது சிதறுமாறு சினக்கின்ற, கமழ்கடாக் களிற்று வேந்தே - மணங்கமழும் மதத்தையுடைய ஆண்யானையையுடைய அரசனே!, தண்சுடர்க் கடவுள்போல் - குளிர்ந்த ஒளியையுடைய திங்களைப்போல, தாரகைக் குழாங்கள் - விண்மீன்களின் கூட்டங்கள், தாமே விண்சுடர் விளக்கமாக விளங்கல - தாங்களொருங்கு கூடினும் திங்கள்போல் விண்ணினிடத்தில் பேரொளியோடு விளங்கமாட்டா; அவ்வாறே, வேந்தர் போல - அரசர்களைப்போல, மண்சுடர் வரைப்பில் - மண்விளங்கு முலகத்தின் கண்ணே, மிக்க மக்களும் இல்லை - சிறந்த மக்கட் பிறப்பினரும் இலராவர், கண்டாய் - அறிந்து கொள்வாயாக. (எ - று). உடுக்கள் பல ஒருங்கு கூடினும் திங்களைப் போன்று சிறந்து திகழ மாட்டாமை போல, மக்கள் பலர் ஒருங்கு கூடி எத்தகைய மாண்புமிக்க செயலைப்புரியினும் அரசர்களைப் போல் சிறந்து திகழமாட்டார்கள் என்க. |