அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்

271. அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிற் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள்
வேலோய்.
 

     (இ - ள்.) பிறங்குதார் - விளங்குகின்ற மாலையினையும், நிறங்கொள் - பகைவர்
குருதியாற் செந்நிறத்தினையுங்கொண்ட, வேலோய் - வேற்படையையுமுடைய அரசனே!
அருந்தவம் - அருமையான தவத்தைத் தாங்குதலும், அரைச பாரம் - அரசாட்சிச்
சுமையைத் தாங்குதலும் ஆகிய, இரண்டுமே அரிய - இவ் இரண்டுசெயல்களுமே
உலகத்தின்கண் செய்தற் கரியவைகளாம், தம்மை வருந்தியும் - தம்மை வருத்தப்படுத்தியும்,
உயிரையோம்பி - மன்னுயிரைப் பாதுகாத்தும், மனத்தினை வணக்கல் வேண்டும் - மேலும்
தம் உள்ளமானது அதன் வழியே ஓடாது தம்வழியே வருமாறு வசமாக்குதலும் வேண்டும்,
திருந்திய இரண்டும் - திருத்தமாகச செய்யப்பெறவேண்டிய இவைகளிரண்டும், தத்தம்
செய்கையில் திரியுமாயில் - தத்தமக்குரிய செயன்முறையில் மாறுபடுமானால், பெருந்துயர்
விளைக்கும் - மிகுந்த துன்பத்தினை யுண்டாக்குவனவாம். (எ - று.) அன்றே, அசை.

அருந்தவம் புரிதலும் அரசாட்சி செய்தலும் செயற்கருஞ் செயல்களாம். 'இவைகளைப்
புரிவார் வருத்தத்தினைப் பொருட்படுத்தாது உள்ளத்தினைத் தம் வழிப்படுத்துதல்
வேண்டும். உள்ளம் அடக்கப் பெறாமல் அதன் வழியில்தானே செல்லுமாயில்
பெருந்துன்பத்தினை உண்டாக்கும் என்க.
“கோளு மைம்பொறி யுங்குறை யப்பொருள்
நாளுங் கண்டு நடுக்குறு நோன்மையின்
ஆளு மவ்வர சேயர சன்னது
வாளின் மேல்வரு மாதவ மன்னனே.
என்றார் கம்பநாடரும் (மந்தரைச்சூழ்ச் - 14)

( 32 )