விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்

272. 1அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு 2வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்.
 

     (இ - ள்.) அந்தரம் திரியுஞ் செய்கை - விண்ணிலே இயங்குதலைச் செய்யும்
செயலினையுடைய, அமரர்தம் அரசு வேண்டி - தேவருலக அரசாட்சி விரும்பி,
இந்திரவுலகங் காணும் நெறியவை யாவை என்னின் - இந்திரவுலகத்தையடையும் வழிகள்
எவைகளோவெனின், மந்திரம்வழாத - மந்திரநெறிகளிலே தவறாத, வாய்மை மாதவம்
முயறல் - மெய்ம்மையான சிறந்த தவத்தை முயன்றுசெய்தல், அன்றேல் - இல்லாவிடின்,
தந்திரம் தழுவி - சூழ்ச்சிமுறையைப் பொருந்தி, செங்கோல் - நெறிதவறாத
ஆட்சிமுறையை, தளர்விலன் தரித்தல் என்றான் - தளர்ச்சியடையாதவனாக
மேற்கொள்ளுதல் என்று கூறினான். (எ - று.)

முறைப்படி அருந்தவம் புரிவோரும் அரசாட்சி புரிவோரும் விண்ணுலக ஆட்சி பெறுவர்
என்க.

( 33 )