அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது

273. மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்
உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரைச பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்.
 

     (இ - ள்.) இரந்தவர்க்கு ஈட்டப்பட்ட இருநிதிக் கிழவ - இரவலாளரின் பொருட்டே
தொகுக்கப்பெற்ற பெருஞ் செல்வத்திற்குரிமை யுடையவனே! மரந்தலையிணங்கி - மரங்கள்
தன் உச்சியிலே பொருந்தப்பட்டு, வான்தோய் - விண்ணுலகுவரை யெட்டியுள்ள, மணிவளர்
வயிரக்குன்றம் - பலவகை மணிகளுண்டாகிற வைரம்பொருந்திய மலையை, தனக்கு உரம்
உயர ஏந்தி - தனக்கு ஆற்றல் உயரும் பொருட்டுத் தூக்கி, உய்த்திடும் - மீளவுங்
கீழேவைக்கும் ஆற்றல் படைத்த, ஒருவற்கேனும் - ஒப்பற்ற திருமாலுக்கும், அருந்தவம் -
செய்தற்கரிய தவமும், அரைசபாரம் - அரசாட்சிச் சுமையும் ஆகிய, அவைபொறை - இவ்
இரண்டும் சுமைகளையும், ஆற்றுதல் - சுமத்தல், அரிது கண்டாய் என்றான் - மிகவும்
அருமையாகும் உணர்ந்து கொள்வாயாக என்று கூறினான். (எ - று.)

மலைதூக்கும் ஆற்றல் வாய்ந்தவனான திருமாலுக்கும் தவமும் அரசாட்சியும் செயற்கருஞ் செயல்களாம் என்றவாறு. குன்றம் ஏந்தி உய்த்திடும் ஒருவன் என்றது திருமாலை. (இனிப் புராணத்தே கூறப்படும்) திவிட்டன் எனினுமாம்.

( 34 )