(இ - ள்.) எரிதவழ்ந்து இலங்கும் வேலோய் - ஒளிமிகுந்து விளங்குகின்ற வேற்படையை யுடையவனே, உரிதினின் - உரிமையாக, ஒருவன்செய்த ஊழ்வினை உதயஞ்செய்து - ஒருவன் உரிமையிற்செய்த பழவினையானது இம்மையில் தோன்றி, விரிதலின் - பெருக்கத்தை யடைதலால், அதனது உண்மை விளங்கினாற்போல - அவ்வூழ்வினையின் மெய்ம்மையானது வெளிப்பட்டாற்போல, வேந்தர் கருதிய கருமச்சூழ்ச்ச - அரசர் செய்வதற் கெண்ணிய செயற்குரிய சூழ்ச்சியானது, பயத்தினால் கருதும் வண்ணம் - காரியத்தின் பயனாலே வெளிப்படும்படி, எண்ணுவது எண்ணம் என்றான் - ஆராய்ந்து துணிவதே சிறந்த ஆராய்ச்சியாவது என்று கூறினான். (எ - று.) ஊழுண்மை விளைவின்கண் வெளிப்படுதல் போன்று சிறந்த சூழ்ச்சியின் சிறப்புப் பயனால் வெளிப்படும். அங்ஙனம் பயன்தருமாறு ஆராய்தலே சிறந்த சூழச்சியாம் என்று சூழ்ச்சியின் மாண்பு கூறினான். |