(இ - ள்.) அஞ்சிநின்று அனலும் வேலோய் - கண்டோர் அஞ்சி நிற்கும்படி எரியும் வேற்படையை யுடையவனே!; வெஞ்சொல் ஒன்று உரைக்கமாட்டா - கொடுஞ் சொல் ஒன்றும் பேசுதலறியாத, சுடர்விடு விளங்கு பூணோய் - ஒளிவிட்டு விளங்குகின்ற அணிகலன்களைத் தாக்கியவனே;, பஞ்சி நன்று ஊட்டப்பட்ட - காரரக்கையாதல் செவ்வரக்கையாதல் குழம்புசெய்து பஞ்சாலே நன்றாகப் பூசப்பட்ட, மாதுளம் பருவ வித்தும் - மாதுளமரத்தினது முதிர்ந்த விதைதானும், மஞ்சி நின்று - மழைவளம் நிற்றலாலே, அகன்ற சாகை - விரிந்து தழைத்ததன் கிளைகளில் தோன்றும், மலரிடை - பூக்களிடத்தே, வடிவு காட்டும் - தன்மேற் பூசப்பட்ட நிறத்தினை வெளிப்படுத்தாநிற்கும், சூழ்ச்சியும் - அரசியலுக்குரிய சூழ்ச்சியும் அன்னது ஏ ஆல் - அத்தகையதொரு தன்மையதாம். (எ - று.) பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு, கரும்பஞ்சுக் குழம்புமாம். மஞ்சி - முகில். மஞ்சி நிற்ப என்க. அத்தகைய தன்மையாவது - விதையில் ஊட்டப்பட்ட நிறம் மலரிடைத் தோன்றுவது போன்று, சூழ்ச்சியில் அமைக்கப்பட்ட கருத்தே செயலில் பயனாய் விளையும் தன்மை. மாதுளம் வித்தில், செவ்வரக்குப் பூசிப்புதைத்தால் செந்நிற மலரும், காரரக்குப் பூசிப் புதைத்தால் கரிய நிற மலரும் தோன்றும் என்ப. இதனை, “மாதுளம் பீசமுண் மாணரக்கின் நிறம் போதுள்ளம் காண்பது போலமற் றென்றான்“ என்னும் நீலகேசிச் செய்யுளானும், “ஒரு மாதுளை வித்தில் காரரக்கும், ஒரு மாதுளை வித்தில் செவ்வரக்கும் பூசிப் பூமியுள்ளிட தத்சந்தானமாகிய பூவிற் கருமையும் செம்மையும் ஆன நிறம் தோன்றியவாறு“ என்னும் அதன் உரையானும் உணர்க. (நீலகே - புத்தவா - செய். 576.) |