(இ - ள்.) கொற்றவேல் மன்னர்க்கு ஓதும் - வெற்றியையுடைய வேற்படையைத் தாங்கிய அரசர்கட்குச் சொல்லப்பெறும், குணம் எலாம் குழுமி வந்து - நற்குணங்களெல்லாம் ஒன்றாகக்கூடி வந்து, முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி - அவைகளெல்லாம் ஒரு வடிவத்தை யெடுத்தாற்போல் அமைந்து விளங்கும் உருவை யுடையவனே! நின்முன்னர் யாங்கள் இற்றென உரைக்கும் நீதி - உனக்கு முன்னர் நாங்கள் இச்செயல் இத்தன்மையோடு கூடியது என்று சொல்லும் அறமானது, ஓதுநூல் எல்லை காணக் கற்றவர்முன்னை - சொல்லப்பெறுகிற பல நூல்களின் முடிவையும் நன்குணருமாறு கற்றவர்கட்குமுன்பு, ஏனோர் கதை ஒத்துகாட்டும் - கல்லாதவர்கள் பேசும் பேச்சை ஒத்துமுடியும் (எ - று.) அன்றே, அசை. எல்லா மாண்புகளும் இனிது நிறைந்த நின் முன்னர் யாங்கள் கூறுவன அறிஞர்மாட்டு அறிவிலார் கூறும் பொருளில் உரையைப் போல் பயனிலவாம் என்க. மன்னர்க்கோதுங் குணமாவன. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை, மறனிழுக்கா மானம் முதலியன. |