(இ - ள்.) தேன்மகிழ் தெரியலாய் - வண்டுகளானவை மகிழ்ந்து மொய்கின்ற மாலையை அணிந்தவனே!, நின் திருக்குலம் தெளிப்பவந்த - நின்மேலான குலத்தை விளங்குமாறு செய்தற்குத் தோன்றிய, பால்மகிழ்ந்தனைய தீஞ்சொல் - பாலின் இனிமையைப்போல் மகிழ்ச்சியை உண்டாக்குகின்ற இனிய சொல்லையும், பவழவாய் - பவழம்போற் சிவந்த வாயையும், பரவை அல்குல் - பரந்த அல்குலையும், வான்மகிழ் மணங்கொள் மேனி - வானுலகத்தாரும் மகிழ்தற்கிடமாகிய மணத்தினைக் கொண்ட உடலினையும் உடைய, அணங்கினுக்கு உரியகோனை சுயம்பிரபைக்கு உரிய தலைவனை, கேட்பின் யாவனென்று - வினாவின் யான் மகிழ்ந்து உணர்த்த - யான் மகிழ்ச்சியோடு விடை கூறுதற்கு, சிறிது இடை அருளுக என்றான் - செவ்வி சிறிது கொடுத்தருள்க என்று கூறினான் (எ - று.) தேன் - வண்டு. தெளிப்ப - விளக்க. வான்மகிழ்மணம் - சிறந்த மகிழம்பூ மணமுமாம். அணங்கு - சுயம்பிரபை. கோனை - என்றது தலைவனை என்றவாறு. மேலே சுச்சுதன் தன் கருத்தை விரித்துரைக்கின்றான். |