(இ - ள்.) அந்த வடசேடியானது, மண்இயல் வாழ்நர்க்கும் - மண்ணுலகிலே வாழ்பவர்கட்கும், வான் உலகு ஒப்பது - விண்ணுலகத்தைப் போன்றது, புண்ணியம் இல்லார் புகுதற்கு அரியது - நல்வினையற்றவர்கள் அடைதற்கு அருமையானது, கண்ணிய - மேலாகக் கருதப்பெறுகிற, கற்பகக் கானங் கலந்தது - கற்பகக் சோலைகள் தன்னிடத்திலே பொருந்தப்பெற்றது, இனிதே - இனிமையாக, விண் இயல் இன்பம் விரவிற்று - தேவருலக இன்பமானது கலந்துள்ளது (எ - று.) வடசேடி வானுலகத்தைப் போன்றது; நல்வினையற்றோர் அடை தற்கரியது; கற்பகச்சோலை யமைந்தது; இன்ப மிக்குடையது என்க. |