(இ - ள்.) கழிஎலாம்-நீர்க்கழிகளில் எல்லாம்; கெண்டை அம்சினை மேய்ந்து-கெண்டைமீன்களையும் அவற்றின் அழகிய முட்டைகளையுந் தின்று; கிளர்ந்துபோய்-செருக்கிச் சென்று; முண்டகம் துறை சேர்ந்த முதலைமா-நீர்முள்ளி நிறைந்த நீர்த்துறையை அடைந்த முதலைகள்; வண்டல் வார்கரை-வண்டலையுடைய நீண்ட கடற்கரையோரங்களிலுள்ள; மாமகரம் குழாம் கண்டு-பெரிய சுறாமீன்களின் கூட்டத்தைப்பார்த்து; நின்று கனலும்-அஞ்சாது எதிர்த்து நின்று சினக்கும். (எ - று.) இது நெய்தல் நிலத்தன்மை. 'நெய்தற்கு மா சுறாவும் முதலையும்' என்றார் நக்கீரர். (இறையனார் களவியல் உரை) இதனை மறுத்து 'மா உமண்பகடு போல்வன. முதலையும் சுறாவும் மீனாதலின், மாவென்றல் மரபன்று' என்றனர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியர். தேவர், மனிதர், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுவகைப் பிறப்பினுள், புள் முதலியவைகள்; தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்னும் நால்வகைக் கதிகளுள் விலங்கு அடங்குவதால் முதலையை மாஎன்றல் பொருந்தும் “சேர வொன்றை யொன்றுமுன் தொடர்ந்து சீறிடங்கர்மா“ என்றார் கம்பர். மாஎன்பதை வண்டல் வார்கரைக்கு அடையாக்கினும் அமையும். முண்டகம்-முள், தாமரை, நீர்முள்ளி,கள், நெற்றி, தாழை முதலிய பொருள் குறிக்கும் ஒரு பெயர்த்திரிசொல். |