(இ - ள்.) பொய்கையுள் - அவ்வுத்தர சேடிக்கண் உள்ள வாவிகள்தோறும், பூப்பன - மலர்வன, பொன் இதழ் தாமரை - பொன்னிறமான இதழ்களையுடைய தாமரை மலர்களேயாம். பொழில் வாய் - அங்குள்ள பூஞ்சோலைகளிடத்தே, அவிழ்ப்பன - இதழ்விரி்த்து மலர்வன, பொன் இதழ் - பொன்னிற இதழ்களையுடைய, தாமம் - புனையப்பட்ட மாலைகளை ஒத்த கோட்டுப் பூக்களேயாம், மணிநிலம் - அழகிய தரையிடமெங்கும், போர்ப்பன - மறைத்துக் கிடப்பன, பொன் இதழ்த்தாது - பொன்னிறமுடைய அப்பூந்துகள்களேயாகும், துகளாய் - அந்நாட்டின்கண் விசும்பிலே பறந்து திரியும் துகள்களாய், பொலிவன - அழகுறுத்துவனவும், பொன் இதழ்த்தாது - அப்பொன்னிறப் பூந்தாதுகளே ஆகும், ஆதலால் அவ்வுத்தரசேடி பொன்னுலகாகவே திகழ்ந்தது. (எ - று.) ஆதலால் அவ்வுத்தரசேடி பொன்னுலகாவே திகழ்ந்தது என்பது குறிப்பெச்சம். பொழிலிடத்தே பூங்கொடிகளில் பூக்கள் நிரலாகச் செறிந்து மலர்ந்துள்ள தோற்றம், மலர்மாலை போறலின் “தாமம் அவிழ்ப்பன“ என்றார். வாவிகளினும் பொழிலினும் நிலத்தினும் விசும்பினும் பொன்னிறமே தோற்றலின் இது பொன்னாடே ஆகும் என்பது கருத்து. பூத்தல் முதலிய நான்கு ஏதுக்களும். அது பொன்னாடாதலைச் சாதித்தன. |