(இ - ள்.) அந்நாட்டில்; கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ கொடுக்கும் கற்பகமரங்கள், கானங்கள் ஆவன - காடுகளாக விளங்குவன, காமுகர் தானங்கள் ஆவன - இன்ப வேட்கையையுடையர் இன்பம் நுகர் வதற்குரிய இடங்களாக விளங்குவன, சந்தனத்தாழ் பொழில் - சந்தன மரங்கள் தாழ்ந்து நெருங்கியுள்ள பொழில்களாம், நானங்கள் ஆவன - வாசனைப் பொருள்களாவன, நாவி - கத்தூரியும், நறுவிரை - நல்ல கலவைச் சாந்துமாம், வானங்கள் ஆம் வகைமற்றும் ஒன்று உண்டோ - இன்பம் நுகர்தற்குரிய விண்ணிடங்களாமாறு வேறு ஒன்றும் உளதோ? (எ - று.) இந்திரருலகமும் பலவாதலின், வானங்கள் என்றார். வடசேடி எவ்வாற்றானும் வானவருரகையே ஒக்கும் என்பதாம். நானம் - மணப் பொருள். |