வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்

284. ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது.
 

      இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்

(இ - ள்.) தீங்கதிர் மண்டிலம்சேர்ந்து திளைப்பன - உலகத்துயிர்களுக்கு இன்பத்தை
விளைவிக்கும் இனிய ஞாயிற்று மண்டலம்வரை வளர்ந்து சிறந்துள்ளனவாகிய, அறுபது
மாநகர் - அறுபது பெரிய நகரங்கள், ஆங்கு அதன்மேல - அவ்வடசேடியின் மிசை
உள்ளனவாம், நீங்கரு மாநகர் தம்முள் - அடைந்தார் பின்னர் நீங்குவதற்கு அருமையாகிய
அவ்வறுபது நகரங்களுக்குள்ளேயும், நிலாவிரிந்து - ஒளிபரவப்பெற்று, ஓங்கிய
சூளாமணியின் ஒளிர்வது - உயர்ந்தமுடி மணியைப் போல விளங்குவது (எ -று.)

இரத்தின பல்லவ நகரத்தின் சிறப்பைக் கூறத்தொடங்குகிறான். இரத்தின பல்லவம்
அந்நகரங்கள் அறுபதினும் சிறந்தது என்று குறித்தற்கு ஓங்கிய சூளாமணியின் ஒளிர்வது
என்றான். சூளாமணி - முடிமணி. சூளாமணியின் ஒளிர்வது இரத்தின பல்லவம் என்ப
தொன்றுண்டு என (285இல்) அடுத்த செய்யுளில் முடியும்.

( 45 )