(இ - ள்.) பூந்தண் இரத்தின பல்லவம் என்பது பொன்நகர் ஒன்று உண்டு - அழகுடையதும் இனிமையுடையதுமாகிய இரத்தின பல்லவம் எனப் பெயரிய அழகிய நகரம் ஒன்று உண்டு, அந்நகரத்தின் கண்ணுள்ள மாடங்கள் யாவும் - வீடுகளெல்லாம், மரத்தினும் மண்ணினும் திருத்தின இல்ல - மரங்களாலும் மண்ணாலும் அமைக்கப்பட்டவைகளல்ல (பொன்னினும் மணியினும் அமைக்கப்பட்டவைகளாகும் அதனால்) செம்பொன் உலகில் புரத்தினை வெல்வது - அழகுமிக்க தேவருலகில் உள்ள அமராவதியையும் அவ்விரத்தின பல்லவம் அழகில் தோற்கடிப்பதாகும் (எ - று.) இரத்தின பல்லவத்து மாடங்கள் மண் மரம் முதலியவைகளால் ஆக்கப்பெறாது பொன்னாலியன்றன வென்க. “கண்ணிலா.........மண்ணினாலியன்றில மதலைமாடமே“ என்றார் நகரச் சருக்கத்தும். |