அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது

286. வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னன்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே.

     (இ - ள்.) வளைதகை மங்கையர் மைந்தரொடு ஆடி - வளையல் களையுடைய
பெருந்தகை மகளிர் தங்காதல் இளைஞர்களுடன் பலவகை விளையாடல்கள் புரிந்து,
முளைத்தெழு காமம் முடிவிலராகி - புதிது புதிதாகத் தோன்றியெழுகின்ற இன்பப்
பெருக்கிற்கு ஒரு முடிவு காண்கிலராகி, திளைத்தலின் - இன்பத்திலே அழுந்துதலால்,
நல்நகர் - நல்லநகரமாகிய அந்த இரத்தின பல்லவம், தெய்வ உலகம் - விண்ணுலகமானது,
களித்து இழிந்த அன்னதுஓர் கவ்வை யுடைத்து - மகிழ்ச்சியையடைந்து மண்ணுலகில்
இறங்கினாற் போன்றதொரு ஆரவார நீர்மையையுடையது. (எ - று.)
அந்நகரத்து ஆடவரும் பெண்டிரும் முடிவிலராகி இன்பந் திளைக்கின்றார்களெனவே,
அவர்கள் இன்பக்கூடலை விட்ட ஒரு பொழுதும் பிரியாமை பெறப்பட்டது.

( 47 )