(இ - ள்.) ஆடவர் - (அவ்விரத்தின பல்லவ நகரத்தில்) ஆண்மக்கள், கொம்பு அனையார் - பூங் கொம்பை ஒத்தவரும், இளையாரவர் - இளைமையுடையவருமாகிய, தங்காதல் மகளிர்களின், பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி - பாடகம் என்னும் அணிகலன் அணியப்பட்ட மென்மையும் அழகும்மிக்க சிறிய அடிகளை, தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் - இதழ்கள் விரிந்த மலர்மாலைகளை அணிந்த தம்முடைய தலைமயிரின்கண், தோய வைத்து - பொருந்தும்படி வைத்து, ஊடல் உணர்த்தும் - அம்மகளிர்களை இரந்து அவர் ஊடல் தீர்க்கின்ற, தொழிலது ஒன்று உண்டு - ஒருதொழில் உளதாம் (எ - று.) நாடா வளமுடைய அவ்வுத்தரசேடியில் வாழ்வோர் உடலோம்பும் பொருட்டு உடல் வியர்க்க வருந்தித் தொழில் செய்யவேண்டியதில்லை என்பது கருத்து. ஊடுதல் காமவின்பத்தை மேலும் மிகுதிப்படுத்தும். ஊடிய மகளிரை உணர்த்துதலும் ஆடவர்க்கு இன்பமே பயக்கும் செயலாம். இக்கருத்தை, “ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப, நீடுக மன்னோ இரா,“ என்னும் திருக்குறளானும் அறிக. காமவேட்கையால் ஊடல் தீருந்துணையும் அல்லலுறுதலின் அதனை வருந்திச் செய்யும் தொழில் என்னும் பொருள்பட வுரைத்தார். |