(இ - ள்.) சிலை - வில்லையுடைய, தடம் - பெரிய, தோளவர் - தோள்களையுடைய ஆடவர்களின், செஞ்சாந்து அணிந்த - சிவந்த சந்தனம் பூசப்பெற்ற, மலைத்தடம் மார்பிடை - மலையைப்போன்ற பெருமையை யுடைய மார்பினிடத்திலே, மைந்தர்க்கண்ணார்தட முலைபாய - மைதீட்டப் பெற்ற களிப்பினையுடைய கண்களமைந்த பெண்களின் பெரிய முலைகள் தாக்குதலானே, முரிந்து முடவண்டு - அவ்வாடவர்கள் மார்பின்கண்ணே அணிந்துள்ள மலர்மாலையின் கண்ணிருந்து நெரிந்து பலவாறு முடமான வண்டுகள், இலைத்தடத்து ஏங்கும் இரக்கம் உளது - தளிராலாகிய படலைமாலையுட் புக்கிருந்து ஏங்காநின்ற வருத்தமும் அந்நாட்டின் கண்ணேயுளது (எ - று.) இவ்வாறு கூறவே அவ்விரத்தின பல்லவத்திலே வேறு வகையினால் வருந்தித் துன்புறுவார் இலர் என்க. இவ்வாறே பிற நூலாசிரியர்களும் நகர்வளம் கூறலைப் பன்னூல்களினும் காண்க. இலை - தளிராலாய படமாலை. |