முரிவனபல

289. வனைந்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ 2முரிவ பலவே.

     (இ - ள்.) வனைந்தனபோலும் வளர்ந்தமுலையார் - செய்து அமைத்தாற் போன்று
பருத்து விளங்குகின்ற கொங்கைகளையுடைய மங்கையர்கள், இன்பக்கனிகள் - காமமாகிய
காழில் கனிகளை, தங்காதலர் - தங்களுடைய காதலர்களானவர்கள், அகம் களித்து -
உள்ளமானது மகிழ்ந்து, காமம் கனிந்து - காம உணர்ச்சி முதிர்ந்து, கலந்துஉண - தம்மோடு புணர்ந்து கூட்டுண்ணாநிற்ப, இனைந்து - அதனால் வருந்தி, முனிந்து -
சினத்தையுடைய, புருவம்பல முரிவ - அம்மங்கையர்களுடைய புருவங்கள் பலவும்
வளைதலையுடையனவாம் (எ - று.)

புருவமுரிவு இன்பநுகர்ச்சியின் களைப்பால் நிகழ்ந்தது. அந்நகரத்திற்கு வேறுவகையான
முரிவுகள் இல்லாமையையுங் கொள்க.

( 50 )