குறிஞ்சி | 29. | கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும் மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும் எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும் உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. | (இ - ள்.) கண்நிலாம் கழையின் கதிர்க் கற்றையும்-கணுக்கள் விளங்குகின்ற மூங்கில்களிடத்தே விளைந்தநெல்லும்; மண்நிலாம் வார் குரல் தினைவாரியும்-மண்ணிடத்தே விளையும் நீண்ட கதிர்களையுடைய தினையாகிய வருவாயும்; எண் இல்-அளவில்லாதனவாய்; விளைவன ஈட்டமும்-விளைகின்றமற்றைப் பொருள்களின் தொகுதியும்; உண்ணில்-பிறர்க்குக் கொடுத்துத் தாம் உண்டபோதும்; ஆங்கு-அந்நாட்டிடத்தே; உலவாமை உயர்ந்த-குறைவுபடாது மிகுந்திருந்தன. (எ - று.) உண்ணிலும் எனல்வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற்றொக்கது. ஆங்க-அசைநிலை. இஃது அந்நாட்டின் செல்வமிகுதியை உணர்த்துகின்றது. மூங்கில் நெல்லும் தினையும் சோளம் முதலிய மற்றைப் பொருள்களின் பெருக்கும் பிறர்க்கு ஈந்தும் தாம்உண்டும் என்றும் குறைவுபடாமல் சிறந்திருக்கும் எனவே அந்நாட்டின் செல்வச் சிறப்புமிகுந்தது என்பது பெறப்படுகிறது. 'குறிஞ்சிக்கு உணவு ஐவனநெல்லும் தினையும் 'மூங்கில் அரிசியும்' என்பது தொல்காப்பியப் பொருளதிகாரவுரை. ஐவனநெல் என்பது மலைச்சாரலில் விளையும் நெல். இன்கதிர் என்று எடுத்து இனியகதிர்கள் என்று பொருள் கூறினுமாம். | ( 29 ) | | |
|
|