(இ - ள்.) செவ்வாய் - இவருடைய சிவந்த வாய்கள், பவழக்கடிகைத் திரள் எனும் - பவழத்தாலாகிய உண்கலன்களின் திரள் என்று பாராட் டுதற்குக் காரணமான, அ வாய் அமிர்தம் உண்டார் ஆடவர்பலர் - அழகிய தங் காதன் மகளிரின் இதழூறலை உண்டார் ஆடவர் பலர், ஒவ்வாது ஒசிந்தனர் இளைப்பர் - அம்மகளிருள் சிலர், அக்கலவிப் போரில் அவ்வாடவருக்கு ஒவ்வாது ஓசிந்து இளையாநிற்பார், அரிஓடுவாள் மை நெடுங் கண் - அம் மகளிருடைய வரி படர்ந்த வாள்போன்ற மையுண்ட நெடிய கண்கள்படும், மலக்கம் - கலக்கம், பெரிது - பெரிதாகும். ( எ - று.) அந்நகரில் கலவிப்போரில் ஒசிந்து இளைக்கும் மடவாரே இளைப்போர்; பிறர் யாருமிலர்; கலங்குவன அவர் தம் கண்களே பிறிதில்லை என்றவாறு. கடிகை - உண்கலம் - துண்டுமாம். மலக்கம் - கலக்கம். |