(இ - ள்.) வளர்வன போலும் - வளரும் இயல்புடைய கொடிகளைப்போன்ற, மருங்குல்கள் - இடைகள், தளர்வன போல்பவர் - கொங்கை முதலியற்றைப் பெறாமல் துவள்கின்றாற் போன்ற மகளிர்கள், நோவ - வருந்தும்படி, தாமச் குழல் மேல் - அவர்தம் மாலையணிந்த கூந்தலிடத்தே போது, இளவாசம் கிளைத்து உண்டு - மலரினது புதிய நறுமணத்தைக் கிண்டி உண்டு. வளர்வன போதரும் - அம்மலர்கள் சிதறுவனவாக வருகின்ற, ஊதை - வடகாற்று, உளது - அந் நகரத்தில் உளதாகும். வடகாற்றைத் தவிரப் பிறரை வருத்துவோர் யாருமிலர் என்பதாம். வாடைக்காற்றுத் துணை பிரிந்தாரைப் பெரிதும் வருத்தும் இயல்புடையது. தலைவன் பரத்தையர் சேரியில் தங்கிவிட்டானாக, அவன் வருவான் என்று எண்ணித் தாம முதலியவற்றால் தன்னைக் கோலம் செய்துகொண்டாள் தலைவி. தலைவன் வாராமையால் தனிமையில் வருந்துகிறாள். அப்போது இவ் வடகாற்று வீசுகின்றது. அதனால் அவள் மிகுதியும் வருந்துகின்றாள். இளவாசம் - அப்பொழுது புதிதாக மலரும் மல்லிகை முல்லை முதலியவற்றின் மணம் என்க. இளவாசம், என்றமையால் அவள் அப்பொழுது கோலம் செய்து கொண்டாள் என்க. உண்டு நோவச் செய்யும் ஊதை என்றதனால் உண்ட வீட்டிற் கிரண்டகம் செய்ததென்னும் ஒரு நயம் தோன்றுதல் காண்க. |