அந்நகரத்தே அஞ்சி மறைவன

292. பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செஞ்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு
மஞ்சா பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே.
 

     (இ - ள்.) பஞ்சுஆர் அகல்அல்குல் பாவையர் - துகில் பொருந்திய அகன்ற
அல்குலையுடைய கொல்லிப்பாவை போன்ற மங்கையர்களின், பூண்முலைச் செஞ்சாந்து
அணிந்து திகழ்ந்த மணிவண்டு - அணிகலன்களையணிந்த கொங்கைகளினிடத்துப்
பூசப்பெற்ற செவ்விய சந்தனக்குழம்பில் படிந்து அச்சாந்து மேலே யமையப்பெற்று
விளங்கிய அழகிய ஆண்வண்டானது, மஞ்சு ஆர் பொழிலுள் - முகில்கள்படியும்
பொழில்களினிடத்திலே, வளர்பெடை கண்டு - தங்கியிருந்த தன் பெட்டைவண்டைப்
பார்த்து, அதற்கு அஞ்சா ஒளிக்கும் - அப் பெட்டைவண்டுக்கு அஞ்சி யொளிக்கும்,
மயலது அது - ஒரு மயக்கத்தையும் உடையது அந்த நகரம், (எ - று.)

ஆண்வண்டு அஞ்சுதற்குக் காரணம் செஞ்சாந்தணிந்து திகழ்கின்றமையே என்க.
செஞ்சாந்தினால் பெடை ஆணிடத்தில் ஊடல் கொள்ளுதற்கு இடமிருத்தலைக் காண்க.

( 54 )