இன்றமிழியற்கை யின்பம்

293. பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின் மொய்பொழி லெல்லாம்.
 

      (இ - ள்.) மொய் பொழில் எல்லாம் - அந்நகரத்தைச் சூழ்ந்துள்ள பூஞ்சோலைகள்
அனைத்தும், பாவையர் - மகளிர்கள், பாசிலை மென்றழைப் பள்ளியுள் - பசிய மெல்லிய
தழையா லியற்றிய படுக்கைமிசைக் கிடந்து தம் காதலரோடு ஆடியதனால், தூசினுள் நின்று
சொரி மணிக்கோவையும் - அம்மகளிர் தம் ஆடையுள்ளிருந்து அற்றுச் சொரிந்த
மணிமாலைகளாலும், பூசின சாந்தும் - அவர்கள் பூசியிருந்த சந்தனத்தாலும், பிணையலும் -
மலர்மாலைகளானும், போர்த்து - போர்க்கப்பட்டு, இடை மூசின வண்டின் - இடையிடையே
மொய்த்த வண்டுக் கூட்டங்களையும் உடையனவாயின,
(எ - று.)

இதனால் அந்நகரத்தின் கண்இன்றமிழியற்கை யின்பம் மிக்கிருந்தமை உணர்த்தப்பட்டது.
மொய்பொழில் - செறிந்த பொழிலுமாம். வண்டின - வண்டுகளையுடையன. சோலை
போர்க்கப்பட்டு வண்டுகளை உடையன என்க.

( 55 )