(இ - ள்.) தாமத் தொடையல் பரிந்து - பூவினாலாகிய மாலைகளை நீக்கி, தமனிய வாமக்கலங்கள் புலம்ப - பொன்னினால் ஆகிய அழகிய அணிகலன்கள் ஒலித்தலைச் செய்ய, மகளிர்கள் - பெண்களின், காமக்கடலை - சிற்றின்பக்கடலை, கலக்கும் கழலவர் - கலங்குமாறு செய்யும் வீரக்கழலை யணிந்த ஆடவர்களின், தீமைத் தொழிலவை - கொடிய செயல்களானவை, தேர்ந்துள - நன்கு பயிற்சியடைந்துள்ளன, அன்றே: ஈற்றசை, (எ - று.) இந்தக் காமத்தொழிலைத் தவிரக் கலங்கச் செய்யும் வேறு தீமைத் தொழில், அந்நகரத்தில் யாதும் இல்லை என்க. |