(இ - ள்.) அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த அடிகளையும், அலங்கல் வேலோய் - மாலையணியப்படட வேற் படையையுமுடைய அரசனே! அச்சுவக்கிரீவன் என்னும் - அச் சுவக்கிரீவனென்று பெயர் சொல்லப்பெறுகிற, பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார்ப் புரவலன் - கட்டவிழ்ந்து அழகினைக்கொண்ட பசியமாலையை யணிந்த அவ்வரசன், திகிரி எய்தி - ஆணையுருளையை (ஆக்ஞாசக்கரம்) அடைந்து, மதி தவழ்குன்றம் எல்லாம் வணக்கியபின்றை - திங்கள் தவழும் வித்தியாதர மலையரசர்களனைவரையுங் கீழ்ப்படியச் செய்த பிறகு, மண்ணும் - மண்ணுலகமும், கொதி தவழ் வேலினான்றன் - கொடுமை மிகுந்த வேற்படையையுடைய அச்சுவக்கிரீவனின், குறிப்பொடு கூடிற்று - கட்டளையின்படியே நடக்கலாயிற்று, அன்றே: அசைநிலை. (எ - று.) அச்சுவக்கிரீவன் அரசனாகிய பிறகு மண்ணுலகமும் அனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாயிற்று என்று இதனால் உணர்த்தப்பட்டது. “பொன்னென்கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்“ என்பதானால் பொன் என்னும் சொல் பொலம் என்று ஆயிற்று. |