(இ - ள்.) வேந்தே - அரசே! சுற்றம் மாண்புடைமையாலும் - அவனுக்கு உறுதிச் சுற்றமாயமைந்தவர்கள் பெருமையையுடையவர் களாகையாலும், சூழ்கதிர்த் திகிரியாளும் கொற்றம் ஆங்கு உடைமையாலும் - புகழ்பாவிய ஆணையுருளையை யுருட்டும் வெற்றி மிகவும் அமைந்திருப்பதாலும், குலத்தது பெருமையாலும் - நற்குலத்தில் தோன்றிய சிறப்பினாலும், கற்ற மாண் விஞ்சையாலும் - பயின்றுள்ள பெருமை பொருந்திய வித்தையாலும், கருதிய முடித்தலாலும் எண்ணியவற்றை எண்ணியாங்கே இனிது முடித்தலாலும், வெற்றிவேல் அவனோடு ஒப்பார் வேந்தர் - வெற்றி வேற்படையையுடைய அச்சுவக்கிரீவனோடு நிகரான அரசர்கள், மற்று இல்லை - வேறு ஒருவரும் இலர், ( எ - று.) உறுதிச் சுற்றம் முதலிய எல்லாவற்றானும் அச்சுவக்கிரீவன் சிறந்தவன் என்பது இதனால் உணர்த்தப்பட்டது. சுற்றம் ஐம்பெருங்குழுவும் எண்பேரா யமும்; உரிமைச் சுற்றமுமாம். கொற்றம் - அரசுரிமையுமாம். குலத்தது; அது: பகுதிப் பொருளது. வெற்றிவேலவன் - அச்சுவக்கிரீவன். |