அவை யடக்கம்
3. கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினும் 1நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே.
 
     (இ - ள்.) கொற்றம்கொள் நேமி நெடுமால் - வெற்றியே கொள்ளும் இயல்புடைய
சக்கரப்படை (முதலிய ஐம்படைகளையும்) ஏந்திய திருமாலாகிய திவிட்டனுடைய, குணம் -
பண்பினை; இப்பால் கூற - இத்தமிழகத்தின்கண் கூறுதற்கு, இங்கு ஓர் காதல் உற்றுக்கிளர
- என்னெஞ்சத்தின்கண் ஓர் அவாத்தோன்றி மிக்கு ஊக்குதலானே, தமிழ் நூற்கலுற்றேன் -
யான் இத்தமிழ்க் காவியமாகிய பெருநூலைச் செய்யத் துணிந்தேன்; இங்கு ஓர் குற்றம்
வருமாயினும் - இதன் கண் குற்றம் வருதல் இயல்பே, அங்ஙனம் குற்றம் உண்டாயினும்;
அறிவிற்பெரியார் - பேரறிவினையுடைய சான்றோர், நங்கள் போல்வார் அற்றங்கள்
காப்பார் - எம்மனோராகிய சிறியோர் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் இயல்புடையர்
அல்லரோ?

     ஆசை வெட்கமறியாது என்னும் பழமொழிக் கேற்ப இச்செயற்குரிய
ஆற்றலில்லாதிருந்தும் இதனைச் செய்யத்துணிந்தேன். ஆயினும் சிறியோர் செய்த
பிழையைச் சான்றோர் பொறுத்தருளும் இயல்புடையர் ஆவர் என்பது எனக்கு ஆறுதல்
அளிக்கின்றது என்பதாம்.

     மேலோருடைய பண்புகளை உணர்தலும் பேசுதலும் எல்லோர்க்கும் நலந்தரும் ஒரு
தலையாதலின் திருமாலின் அம்சமான நம்பியின் குணத்தைக்

     (பாடம்) 1. நுங்கள் போல்வார்.
    
     கூற என் நெஞ்சத்தே அவா உண்டாயிற்று; அக்காரணத்தால் இந்நூலைச்
செய்கின்றேன். யான் சிறுமையுடையேன் ஆதலின் இதன்கண் குற்றம் காணப்படுதல்
இயல்பே. குற்றம் நிகழுமாயினும் சான்றோர் பிறர் குற்றத்தைப்
பொறுக்குமியல்புடையராதலின் அதுபற்றி இதனைச் செய்யத்துணிந்தேன் என்று இதன்கண்
நூற்சிறப்பும் அவையடக்கமும் ஒருங்கே கூறினர் என்க.

     பெரியோர் பிறர்குற்றம் மறைக்கும் இயல்புடையார் என்பதனை,
  “அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.“ (குறள் - 620)
என்னும் அருமைத் திருக்குறளாலும் உணர்க.

     சான்றோர் குணநலம் பேசுதலும், அத்தகைய நூலொடு பயில்தலும் ஆற்றவும்
நலந்தருஞ் செயல்களாதலை,
  “சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்குணர்த்தரி தெண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவ ரேமுத லோரவர்
நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ“
     (கம்பராமா - பாயிரம் - 2)

     எனவரும் கம்பநாடர் கருத்தானுமுணர்க.
     இனி இங்ஙனம் கூறவே பாயிரப் பொருள் எட்டனுள் ஒன்றாகிய 'பயனும்'
ஓதியவாறாதல் உணர்க.

     இப்பால் என்றது வடவேங்கடம் தென்குமரியாயிடைக் கிடந்த இத் தமிழ்கூறு
நல்லுலகத்தே என்பதுபட நின்றது. உற்று - உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த
வினையெச்சம். உறு - மிகுதிப் பொருளது. கிளர்தல் - மேன்மேலும் தூண்டாநிற்றல். நூல்
என்பது சுவடிகளுக்கு உவம ஆகுபெயர். என்னை?
  “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியுமாறு“ (நன் - பா - 24)
     என்பவாகலான் அவ்வாகுபெயர்ப் பொருட்கேற்ற வினைகொடுத்துத் தமிழ்
நூற்கலுற்றேன் என்றார். இங்ஙனமே கம்பநாடரும் “நொய்தின் நொய்யசொல் நூற்கலுற்றேன்“
என்றும் (கம்ப. 1 - 8) “ஆசைபற்றி அறையலுற்றேன்“ என்றும் (கம்ப.1 - 7) ஓதுதல்
உணர்க. நங்கள் போல்வார் - எம்மனோர்.

(3)