முல்லை

30. பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
 
     (இ - ள்.) பேழ்த்தகாயின பேர்எள்-முற்றிப் பிளவுபட்டனவான காய்களையுடைய
பெரிய எள்ளுச்செடிகளும்; பிறங்கு இணர்த் தாழ்த்த காயின தண்
அவரைக்கொடி-விளங்குகின்ற கொத்துக்களாகத் தாழ்த்த காய்களையுடைய குளிர்ந்த
அவரைக்கொடியும்; சூழ்த்த காய்த்துவரை-தம்மைச் சூழும்படி காய்களைக் காய்த்த
துவரைச்செடிகளும்; வரகு-வரகும்; என்ற இவை-என்று சொல்லப்பட்ட இவைகள்;
முல்லைநிலங்கள்-முல்லை நிலங்களிலே; மூழ்த்த போன்றுஉள-செறிந்து மூடியிருப்பதுபோல்
உள்ளன,
(எ - று.)

     இது முல்லைநிலத்தின் சிறப்பு. முல்லைக்குஉணா, வரகும் சாமையும் முதிரையும்
என்ப. பேரெள், எள்ளில் ஒருவகை. அவரைக் கொடிக்குத் தன்மை அடர்ந்து
நிழல்தருதலும் பசுமையும் கண்ணுக்கினிமையுமாம்.

( 30 )