அமைச்சனும் நிமித்திகனும்

301. ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தாற்றல்
1கோணைநூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்தவல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவ ரில்லை கண்டாய்.
 

     (இ - ள்.) அவ்வச்சுவக்கிரீவனுக்கு, அரிமஞ்சு - அரிமஞ்சு என்னும்
பெயரையுடையவன், ஆணைநூல் அமைச்சன் ஆவான - அறநூல்களை நன்குணர்ந்த
அமைச்சனாக அமைந்திருக்கின்றான், அவனது ஆற்றல் - அவனுடைய வலிமையானது
எத்தன்மையது என்றால், கோணை நூற்பவரை - கொடுமைகளைச் செய்பவர்களை,
தன்சொல் குறிப்பின்மேல் நிறுத்த வல்லான் - தன் சொல்லின் வழியே நிற்குமாறு செய்யக்
கூடியவன், மற்றும், பேணும் நூல் நிமித்தம் வல்லான் - அவனுக்கு முக்காலமு முரைக்கும்
நிமித்திகனாக அமைந்துள்ளவன் எல்லோரும் போற்றும் நிமித்த நூலிலே
ஆற்றலையுடையவன். சதவிந்து - சதவிந்து என்னும் பெயரினையுடைவன்,

பெரிய நீரான் - அவன் முக்காலமுங்கூறும் பேராற்றல் அமையப் பெற்றவன், காணும்
நூற்புலமை - அவனறிந்துள்ள நிமித்த நூல் அறிவை, யாரும் காண்பவர் இல்லை - யாரும்
இவ்வளவென்று அளந்தறிபவர் இலர், கண்டாய் - தெரிந்துகொள்வாயாக, (எ - று.)

இச்செய்யுளால் அச்சுவக்கிரீவனுடைய அமைச்சன் திறமும் சோதிடன் திறமும் கூறப்பட்டன.
அறிவு நலம் செறியப்பெற்ற அமைச்சனையும் நிமித்திகனையும் துணையாகவுடையவன்
எதற்கும் அஞ்சான் என்பது குறிப்பு.

( 63 )