அச்சுவகண்டனது தோள்வன்மை

303.

குளிறுவா ளுழுவை யன்னான் 1குமாரகா லத்து முன்னே
களிறுநூ றெடுக்க லாகாக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா னுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்.
 

      (இ - ள்.) குளிறு - முழங்குகின்ற, வான் உழுவை அன்னான் - வாளைப்போல்
தீமையைச் செய்யும் புலிக்கு ஒப்பானவன், குமார காலத்து முன்னே - காளைப்பருவத்திற்கு
முன்னரே, நூறுகளிறு எடுக்கல் ஆகா - நூறு ஆண் யானைகளாற் கூட எடுக்கமுடியாத,
கல்திரள் - பெரிய கற்பாறை ஒன்றை, ஒளிறுவாள் உழவன் - ஒளிசெய்கின்ற வாட்படையை
யுடையவன், கடகக் கையால் ஏந்தி - காப்பினையணிந்த தன் கைகளால் எடுத்து, உருட்டி
வட்டாட - உருளச் செய்து சூதாடுகருவிக் காயைப் போல் ஆட்ட, அன்றே -
அன்றுமுதலே, வெளிறு இலாக் கேள்வியானை - குற்றமற்ற கல்வியறிவுடைய அவனது
ஆற்றலைக் கண்டு, விஞ்சையர் அஞ்சியிட்டார் - வித்தியாதரர்கள் அச்சங்கொண்டு
விட்டார்கள், (எ - று.)

அச்சுவகண்டன் இளைஞனாக இருக்கும்போதே செய்த வீரச்செயல் ஒன்றால், வித்தியாதர
மன்னர்கள் அச்சுவகண்டனுக்கு அஞ்சிக் கீழ்ப்படிந்தனர் என்னும் செய்தி இதில்
கூறப்பட்டது.

( 65 )