(இ - ள்.) மன்னா - அரசனே!, முன்தவம் உடைமையாலே - அவன் முன்னாட் செய்த தவத்தினை யுடையவனாகையால், மூரிநீர் உலகம் எல்லாம் - பெருமை பொருந்திய கடலாற் சூழப்பெற்ற வுலகத்திலே, அவன் ஏவல்கேளா மன்னவர் இல்லை - அவனுடைய பணியைக் கேட்டுச் செய்யாத அரசர்களில்லை, நல்தவ நங்கை தோன்றா முன்னம் - நல்ல தவத்தினையுடைய சுயம்பிரபை பிறப்பதற்கு முன்பு, நாம் ஆண்டது எல்லாம் - நாம் அரசாட்சிசெய்த தெல்லாம், அவன் செற்று நலிதல் அஞ்சி - அம்மன்னவன் சினந்து வருத்துதலுக்கு அச்சங்கொண்டு, திறைகொடுத்து - கப்பப்பொருள் கொடுத்து, அறிவித்தன்றே - யான் அவனடிப்பட்டமையை அவனுக்குத் தெரிவித்தமையாலன்றோ? (எ - று.) நாமும் அந்த அச்சுவக்கிரீவனுக்கு அஞ்சித் திறை செலுத்தித் தான் வாழ்ந்திருந்தோம் என்று அமைச்சன் அரசனுக்குக் கூறுகின்றான். |