(இ - ள்.) சுடர்மணி மருங்கல் - ஒளிவிடுகின்ற மணிகள் அணிந்த பக்கத்தையும், பைங்கண் - பசிய கண்களையும், சுளிமுகம் - சினக்கின்ற முகத்தையும், களி - களிப்பினையும் உடைய, நல்யானை - நல்ல யானைப் படையை உடையவனும், அடர்மணிக் கதிரும் - நெருங்கிய மணிக் கோவையையும், பைம் பொன்மாலையும் - பசிய பொன்னரிமாலையும் அணிந்த, சூடிய சென்னி - திருமுடியை உடையவனும் ஆகிய, தொடர்மணிப் பூணினாற்கு - நீண்ட மணியணிகளைப் புனைந்த சுவலனசடி அரசனுக்கு, சுச்சுதன் சொல்லக்கேட்டு - சுச்சுதன் என்னும் அமைச்சனானவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்து, படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் - ஒளிபரவிய மணிமாலையையும் தளிர் மாலையையும் அணிந்த பவச்சுதன் என்னும் அமைச்சன், பகரல் உற்றான் - தன் எண்ணத்தைச் கூறத்தொடங்கினான், (எ - று.) இதுவரையில் சுச்சுதன் அரசனுக்குக் கூறியவைகளைக் கேட்டக் கொண்டிருந்த பவச்சுதன் என்பவன் இப்பொழுது தன்னுடைய எண்ணத்தைக் கூறத் தொடங்கியிருக்கிறான். யானை, ..........பட்டத்து யானை எனினுமாம். |