மருதம்

31. மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.
 

     (இ - ள்.) மோடு கொண்டஎழு-பருமையைக் கொண்டு ஓங்கும்; மூரிகழை
கரும்பு-பெரிய கருப்பங்கழிகளை; ஊடுகொண்ட-தம்மிடத்திலே கொண்ட;
பொதும்பரொடு-சோலைகளுடனே; உள்விராய்-அதனுள்ளே கலந்து;
தோடுகொண்ட -தொகுதியுற்ற; பைங்காய்-பசியகதிரை ஈன்று; துவள் செந்நெலின் காடுகொண்டு-தலைசாயப்பெற்ற செந்நெற் பயிர்களின் மிகுதியைக் கொண்டு; கண்
அகல் நாடு எலாம்உள-இடமகன்ற மருதநிலப் பகுதி முழுவதும் உள்ளன. (எ - று.)

இது மருதநிலத்தின் மாண்பு மருதத்திற்கு உணவு செந்நெல்லும் வெண்ணெல்லும். செந்நெல்
மிகுந்த நீர்வளத்திலே விளையும் நெற்பயிரின் ஒரு சிறந்த சாதி.

( 31 )