பிறந்த நாட் குறிப்புக் கூறல்

310. மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்.
 

     (இ - ள்.) மானக்கோதை - பெருமை பொருந்திய மாலையிணை யணிந்த,
மாசறுவேலோர் - குற்றமற்ற வேற்படையையுடையவனே! நானக் கோதை நங்கை பிறந்த
நாளால் - கத்தூரி மணங்கமழும் மாலையை யணிந்த சுயம்பிரபை தோன்றிய நாளில், வரவு
எண்ணி - மேல் நிகழப் போகின்றவைகளை நினைத்து, வானக்கோளின் மாண்புணர்வார்கள்
- விண்ணிற் செல்லும் கோள்களின் (கிரகங்களின்) பெருமையை யறிந்தவர்கள், மறு
இல்லாத் தானக்கோளில் - குற்றமில்லாத இருப்பிடங்களில் கோள்கள்
அமைந்துள்ளமையால், சாதகவோலை - பிறந்தநாட் குறிப்புச் சுவடியை, தலைவைத்தார் - சிறந்ததாகக் குறித்து வைத்துள்ளார்கள். (எ - று.)
பிறந்தநாட் குறிப்புச் சிறந்ததாக விளங்குகின்றது என்றல். தலை வைத்தல், மற்றவைகள்
யாவற்றிற்கும் முதன்மையாய் இருக்கச் செய்தல்

( 72 )