(இ - ள்.) காவிப்பட்டம் - செங்கழுநீர் மலர்கள் நிறைந்த நீர் நிலைகள், கள் விரி - தேனை மிகப் பெருக்குகின்ற, கானல் - நெய்தல் நிலத்தையுடைய, கடல் நாடன் - கடலாற் சூழப்பட்ட நாட்டிற்கு அரசன் ஆகியவனும், மேவிப்பட்டம் பெற்றவன் - தன் தந்தையால் விருப்பப்பட்டு முடி சூட்டப்பெற்றவனும் ஆகிய, காதல் மேயானால் - தன்பாற் காதற் கிழமை பூண்டுள்ள தன் கணவனாலே, ஏவி - ஒவ்வொரு வினையின்கண் செலுத்தப்பட்டு, பட்டம் ஈந்தவர் எல்லாம் - அதன்கட் சிறப்புடைமை கண்டு பட்டம் வழங்கப்பட்ட பிறரெல்லாம், இனிது ஏத்தும் - இனிதாக வணங்கற் சிறப்புடைய, தேவிப்பட்டம் - கோப்பெருந்தேவி என்னும் சிறப்புப் பட்டத்தை - திருவன்னாள் - திருமகளை ஒத்த நஞ்சுயம்பிரபை, சேர்பவள் - எய்துதற்கரியள் ஆவள், (எ - று.) அன்றும் ஏயும் அசைகள். அரசன் சிறப்புக் கருதி காவிதி, ஏனாதி முதலிய பட்டங்களைத் தன் பெருங்குடி மக்கட்கு வழங்குதல் மரபு. அங்ஙனம் சிறப்புப் பெற்றாரும், அரசனை வணங்குங்கால் கோப்பெருந்தேவியையும் வணங்குதலுண் மையின் “ஏவிப்பட்டம் ஈந்தவர் எல்லாம் இனி தேத்தும் தேவிப்பட்டம்“ என்றார். ஈந்தவர் - ஈயப்பட்டவர். சுயம்பிரபைக்குச் சாதக வோலை வரைந்தவர், அவள் தன் கணவனால் அளிக்கப்படும் தேவிப்பட்டம் பெறுவாள் என்று வரைந்துள்ளனர், என்பதாம். எனவே, அச்சுவக்கிரீவன் முன்னரே தன் மனைவிக்குத் தேவிப்பட்டம் அளித்து விட்டான் ஆதலால் அவன் சுயம்பிரபைக்குக் கணவனாகான் என்பது சாதக வோலையா லறிகின்றேன் என்பது குறிப்பாயிற்று. |