(இ - ள்.) நம் கோன் - நம்முடைய வேந்தனாகிய சடியரசனுடைய, நங்கை - மகளாகிய சுயம்பிரபைக்கு, நன்மகன் ஆகி நனி வந்தான் - நல்ல மணமகனாகத் தவமிகுதியால் தோன்றியவன், தங்கோன் ஏவ - தன் தந்தையாகிய அரசன் ஏவுதலானே இளவேந்தாய்த் தலை நின்றான் - இளவரசுப் பட்டம் பெற்றவனாய் அவன் ஏவலிற் றலைசிறந்து நின்றவன், இவ்வுலகம் - இப்பேருலகமெல்லாம், எங்கோன் என்று ஏத்தும் இயல் தன்னால் - இவன் எம் மன்னன் என்று பாராட்டுதற்குரிய அரசிலக்கண முடைமையால், செங்கோல் இன்பம் சேர்பவன் - புதிதாக இவனை மணந்த பின் செங்கோல் ஏந்தும் சிறப்பினைப் பெறுபவன், செருவேலான் - போரின்கண் மிக்கு விளங்கும் வேற்படையை உடையவன், (எ - று.) பவச்சுதன் அவையோரை நோக்கிக் கூறுகின்றான் ஆதலால் நங்கோன் என்றான். இச்சாதகக் குறிப்பெல்லாம் அச்சுவக்கிரீவன்பால் இல்லை என்பது குறிப்பு. எனவே அவன் இவள் கணவன் ஆகான் என்பது கருத்து. |