(இ - ள்.) சூழிக்கோலச் சூழ்களியானை - முகபடாத்தினால் அழகு படுத்தப்பெற்றுப் பலவாகசச் சூழ்ந்த களிப்புடைய யானைகளையும், சுடர் வேலோய் - ஒளி செய்கின்ற வேற்படையையுமுடைய அரசனே!, ஆழிக்கோமான் அச்சுவகண்டன் அவனுக்கு - உருளைப்படையை யேந்திய அரசனாகிய அச்சுவக்கிரீவனுக்கு, ஊழிக்காலம் - வாழ்நாள், ஊழிக்காலம் போன்று பெரிதும் கழிந்தன; என்னும் உரையாலும் - உன்று உலகத்தவர் கூறுஞ் சொற்களாலும், தாழிக்கோலப் போது அன கண்ணாள் தகுவாளோ - தாழியில் வைத்து வளர்க்கப்பட்ட அழகு பொருந்திய குவளைப்பூவையொத்த கண்ணையுடையவளாகி சுயம்பிரபை மணமகளாம் தகுதி பொருந்தியவளாவாளோ? (எ - று.) அச்சுவக்கிரீவன் அகவை மிகுந்தவன் என்று உலகத்தார் உரைக்குஞ் செய்தியை இதனால் கூறினான். அதனால் சாதகவோலை காமப் பருவத்தாள் என்றதற்கு அச்சுவக்ரீவன் அமையாமை காட்டினான். |