சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்

318. மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காரளக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
1கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் 2கொடுவென்றான்.
 

     (இ - ள்.) கொய்யா விம்மும் கொங்கலர் தாரோய் - கொய்து தொடுக்கப்பெற்று
மணம் வீசும் மலர்மாலையை அணிந்தவனே!. மையார் சென்னி மால்வரையாளும் -
முகில்கள் படியப்பெற்ற முடிகளைக் கொண்ட பெரிய மலைகளை அரசாட்சி செய்யும்,
வயமொய்ம்பில் - மிகுந்த வலிமையினையும், கையார் எஃகில் காளைகள் தம்முள் -
கையில் வேற்படையையுமுடைய இளைஞர்களுக்குள், கமழ் கோதை மெய்யாமேவும் -
மணம் வீசும் மாலையை யணிந்த சுயம்பிரபை வாய்மையாகக் காதலித்தற் குரிய;
மேதகுவானை - சிறப்பமைந்தவனை, மிக எண்ணி - மிகவும் ஆராய்ந்து முடிவு செய்துஇ
கொடு என்றான் - கொடுப்பாயாக என்று கூறினான். (எ - று.)

இது சடிமன்னன் பவச்சுதனுக்குக் கூறியது. கோதை - சுயம்பிரபை. மெய்யா - மெய்யாக. மே - மேன்மை. தாரோய் என்றது பவச்சுதனை விளித்தது.

( 80 )