(இ - ள்.) கேடுஇல் - எவ்விதமான தீமையும் இல்லாத, இம்மலையின் மேல் - இந்த மலையின்மேலுள்ள கின்னரகீதம் ஆளும் - கின்னரகீதம் என்னும் வித்தியாதர நகரத்தை யரசாட்சி செய்யும், தோடு இலங்கு உருவத்தொங்கல் - இதழ் விளங்குகின்ற அழகிய பூமாலையை யணிந்த, சுடர்முடியரசன் செம்மல் - ஒளி விளங்குகின்ற முடியைத் தாங்கிய அரசனுடைய தலைமகனும், பாரித்து - மிகுத்து, ஆடல் அம் புரவி வல்ல - ஆடுதலில் சிறந்த அழகிய குதிரையைச் செலுத்துதலிற் சிறந்த, அரசிளங் குமரன் - அரசிளங் குமரனுமாகி யிலங்குபவன், பாடல் வண்டு இமிரும் பைந்தார்ப் பவனஞ்சன் - இசை பாடுதலையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற பசிய மாலையை யணிந்த பவனஞ்சன் என்னும் பெயரையுடையவன், என்ப - என்று கூறுவார்கள், என்றான் - என்று கூறினான், (எ - று.) கின்னரகீதம் - விஞ்சையர் நகரத்துள் ஒன்று. செம்மல் - ஈண்டு மகன் என்னும் முறைப் பெயர் மேனின்றது. |