(இ - ள்.) அளந்து அறிவரிய செய்கை - அளவுபடுத்தி யறிவதற் கருமையான செயல்களையுடைய, அமிழ்தமா பதியை ஆளும் - அமிழ்தபதி நாட்டை அரசாட்சி செய்கின்ற, வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் - வளன்மிக்க வைரத்தினாலாகிய பசிய அணிகலன்களை யணிந்த அரசனுடைய மகனும், வண்தார் விளங்கு ஒளி உருவத் திண்டோள் - வளப்பம் பொருந்திய மாலை விளங்குகின்ற அழகு மிக்க வலிய தோளையுடையவனும் ஆகிய, வேக மாரதனையன்றே - வேகமார தன் என்பவனையல்லவே, இருநிலம் - இந்தப் பெரிய நிலவுலக மானது, இளம்களி உழுவையாக - இளமையுங் களிப்புமுடைய புலி என்று, புகழ்வது என்றான் - புகழ்ந்து கூறுகிறது என்றான். அமிழ்த பதிநாட்டு வேகரதன் என்பவனும் சிறந்தவன் என்று இயம்புகிறான். |