மேகபுரத்துப் பதுமரதன்

321. வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத் தேர்ப் பெயரினானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்.
 

     (இ - ள்.) உருவத்தாரோய் - அழகிய மாலையை யணிந்தவனே!, வேழத்தால் -
கரும்பினாலே, பொலிந்த சோலை - விளக்கமடைந்த சோலைகளாலே சூழப்பெற்ற,
மேகமாபுரமதாளும் - மேகபுரத்தினை யரசாட்சி செய்கின்ற, ஆழித்தேர் அரவத்தானை
அரசர்கோன் புதல்வன் - உருளை பொருந்திய தேரையும், ஒலி பொருந்திய
படையையுமுடைய அரசர்கோனுடைய மகனாகிய, அம்தார் பாழித்தோள் - அழகிய
மாலையை யணிந்த பருத்த தோள்களையும், உருவச் செங்கண் - அழகிய சிவந்த
கண்களையுமுடைய, பதுமத்தேர்ப் பெயரினானை - பதுமரதன் என்னும்
பெயரையுடையவனை, வேந்தர் - அரசர்கள், ஊழித்தீ என்று உட்குவது - உலகம்
முழுமையையும் அழிக்குந் தீயென்று அஞ்சுவர், (எ - று.)

இவ்வாறு இயம்பவே இந்தப் பதுமரதன் என்பானும் தக்கார்களில் ஒருவன் என்பது பெறப்பட்டது.

( 83 )