(இ - ள்.) இலங்கு ஒளி மாடவீதி - விளங்குகின்ற ஒளியமைந்த மாளிகைகள் பொருந்திய தெருக்களையுடைய, இரத்தினபுரம் அது ஆளும் - இரத்தினபுரத்தை அரசாட்சி செய்கின்ற, உலம்கெழு வயிரத்திண்டோள் ஒளி முடியரசன் செம்மல் - திரண்ட கல்லைப்போலமைந்து வயிரம் பொருந்திய திண்ணிய தோளையும் ஒளி தாங்கிய முடியையுமுடைய அரசன் மகன், அலங்கள் அம்புரவித்தானை - அசைகின்ற மாலையினையணிந்த அழகிய குதிரைப் படையை யுடையவன், அருங்கலத்தேரின் பேரன் - சுவர்ணரதன் என்னும் பெயரையுடையன், குலங்கெழு குரிசில் - நற்குடியில் தோன்றிய சிறப்பையுடையவன், கொண்டல்வான் உருமோடு ஒப்பான் - முகிலில் தோன்றுகின்ற பேரிடியை ஒத்தவன், கண்டாய் - உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) சுவர்ணரதன் என்னும் பெயரைத் தமிழில் பெயர்த்துச் சொல்ல விரும்பியவர் 'அருங்கலத் தேரின் பேரன்' என்றார். அருங்கலம் பொன்னை ஈண்டு உணர்த்திற்று. |