(இ - ள்.) மன்னா - அரசனே! செந்தளிர் புதைந்த சோலை - சிவந்த தளிர்கள் நிறைந்த பொழில்களாற் சூழப்பெற்ற, சித்திரகூடம் ஆளும் - சித்திரகூட நகரத்தை அரசாட்சி புரிகின்றவனும், அம்தளிர் அலங்கல் மாலை அரசர்கோன் சிறுவன் - அழகிய தளிர்கள் இடையிடை தொடுத்துக் கட்டப்பெற்ற மாலையினையணிந்தவனுமாகிய அரசர் பெருமானுடைய மகன், அம்தார் இந்திரன் புதல்வன் அன்னான் - அழகிய மாலையினை யணிந்த இந்திரன் புதல்வனாகிய சயந்தனை ஒத்தவன், ஏந்தல் எமாங்கதற்கு - சிறந்தவனாகிய அவ்வேமாங்கதனுக்கு, இம்மந்திர உலகில் வாழும் மன்னர் மாறு இல்லை - இவ்வித்தியாதர ருலகத்தில் அரசாட்சி செய்யும் அரசர்கள் எவரும் பகையுடையவர்கலலர், (எ - று.) பேராற்றலும் சூழ்ச்சித்திறனும் பிற நலங்களும் உடையனாதலின் பகைவர்கள் இலராயினர் என்க. |