அச்சுவபுரத்துக் கனக சித்திரன்

326. அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
1ஒருமணி திலதமாக வுடையது நிலம தென்றான்.
 

      (இ - ள்.) அருமணி அடுத்த வீதி - அரியமணிகள் பொருந்திய
தெருக்களையுடைய, அச்சுவபுரமது ஆளும் - அச்சுவபுரத்தினை அரசாட்சி செய்கின்ற,
திருமணி திகழும் பூணான் பெருமகன் - அழகிய மணிகள் பதித்துச் செய்யப்பட்டு
விளங்கும் அணிகலன்களை யணிந்த அரசனுடைய தலைமகனும், சிறைவண்டு என்னும்
கருமணி துதைந்த பைந்தார்க்கனக சித்திரனை அன்றே - சிறைகளையுடைய வண்டுகள்
என்று கூறப்பெறுகின்ற கரியமணிகள் பொருந்திய பசிய மாலையினை யணிந்தவனுமாகிய
கனகசித்திரனையல்லவோ, நிலம் - நிலவுலகமானது, ஒரு மணிதிலதமாக உடையது என்றான்
- ஒப்பற்ற அழகிய நெற்றிப் பொட்டைப்போலப் பெற்றிருக்கின்றது என்று கூறினான்,
(எ -று.)

வண்டுகள் குண்டு குண்டாகக் காணப்படுதலின் “சிறைவன் டென்னும் கருமணி“ என்றார்.

( 88 )