(இ - ள்.) சீர்அணி முழவம் ஓவா - சிறப்புப் பொருந்திய அழகிய மத்தளவொலி நீங்கப்பெறாத, சிரீநிலை அதனை ஆளும் - திருநிலையம் என்னும் நகரத்தினை அரசாட்சி புரிகின்ற, கார் அணி தடக்கை வேந்தன் கான்முளை - கொடையினால் முகிலைப் போலும் அழகிய பெரிய கைகளையுடைய அரசன் மகனும், கனபொன் ஆர்ந்த தேர் அணி அரசத்தானை - அழகிய பொற்றகடுகள் பதிக்கப்பெற்ற தேரையும் இனிய ஒலி மிக்க படையையுமுடைய, சித்திரத்தேரின் பேரான் - சித்திர ரதன் என்னும் பேரையுடையவன், தார் அணி மார்பன் அன்றே - மாலையால் அழகு பெற்ற மார்பினையுடைய அவனல்லனோ, தரணிக்கோர் திலதமாவான் - உலகிற்கு மிகச் சிறந்தவனாக விளங்குகின்றவன், (எ - று.) சித்திர ரதன் மிகவும் சிறந்தவன் என்றபடி. |