(இ - ள்.) கற்றவர் புகழுஞ் சீர்த்தி - அறிஞர்களால் விதந்தோதப் பெறுகிற மிகுந்த புகழையுடைய, கனகபல்லவத்தையாளுங் கொற்றவன் சிறுவன் - கனகபல்லவம் என்னும் நகரத்தை அரசாட்சி செய்கின்ற அரசனுடைய மகனும், கோலக் குங்குமக் குவவுத்தோளான் - அழகிய குங்குமம் அணியப்பெற்ற பருத்த தோள்களையுடையவனும், செற்றவர்ச் செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் - பகைவர்களையழிக்கும் செயலாகிய போரிலே வல்லவனும் ஆகிய, சிங்ககேது - சிங்ககேது என்பவன், பிறந்த பின்னாம் - பிறந்தற்குப் பிறகுதானாம், மண்மகள் மகிழ்ந்தது என்றான் - நிலமகள் மகிழ்ச்சியையடைந்தது என்று கூறினான், (எ - று.) சிங்ககேதுவின் சிறப்பை நோக்கி நிலமகள் மகிழ்ச்சி யடைந்தனள் என்க. |